சுகதாரத்துறை மற்றும் காவல்துறையினர் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளதாக கோயம்புத்தூர் மாவட்ட இயற்கை வழி வாழ்வியலாளர் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள இரும்பொறை கிராமத்தைச் சேர்ந்தவர் இதயவனம் இளங்கோ. அவரது மனைவி காயத்ரி. இவரது மனைவி மருத்துவமனைக்குச் செல்லாமலேயே ஏற்கனவே வீட்டில் ஆரோக்கியமாக இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்தவர்.

தற்போது வயிற்றில் மூன்றாவது குழந்தையுடன் பேறுகாலத்தில் இருக்கும் காயத்ரியை, சுகாதாரத் துறையினர் மற்றும் சிறுமுகை காவல்நிலைய காவலர்கள் மருத்துவமனையில் தான் குழந்தைபெற்றுக்கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளனர்.
மேலும், சட்டத்திற்கு புறம்பாக தாக்கி, தகாத வார்த்தைகளால் பேசி மானபங்கம் செய்ததுடன், ”வேறு வழக்கில் உள்ளே போடுவேன்” என்று சிறுமுகை காவல்நிலைய காவலர் சுரேஷ்குமார் மற்றும் அவருடன் வந்த பெண் காவலர் இருவரும் இதயவனம் இளங்கோ மற்றும் அவரது மனைவி காயத்ரிக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். இச்செய்தியை சமூக ஊடகங்கள் வாயிலாக கோயம்புத்தூர் மாவட்ட இயற்கைவழி வாழ்வியலாளர் கூட்டமைப்பு வெளியிட்ட மின்னணு சுவரொட்டி மூலமாக அறிந்து கொண்டோம்.
வீட்டில் பிரசவம் பார்ப்பது என்பது அரசால் தடை செய்யப்பட்ட விடயமல்ல. பாதுகாப்பான முறையில் வீட்டில் பிரசவம் பார்ப்பவர்களை அவ்வாறு பிரசவம் பார்க்கக் கூடாது என்று மிரட்டியது மூலம் சுகாதாரத் துறையினரும், காவல் துறையினரும் இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவுக் கூறு-21க்கு(Article-21) எதிராக செயற்பட்டுள்ளனர்.
இதயவனம் இளங்கோ மற்றும் கர்ப்பிணியானஅவரது மனைவி காயத்ரி இருவரை மிரட்டி மன உளைச்சலுக்கு உள்ளாக்கிய சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீதும் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.